கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்த தென்னாப்பிரிக்கா ..! நூலிழையில் வெற்றியை தவறவிட்ட வங்கதேச அணி ..!
டி20I: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 21-வது போட்டியாக வங்கதேச அணியும், தென்னாபிரிக்கா அணியும் இன்று மோதியது.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 21-வது போட்டியில் வங்கதேச அணியும், தென்னாபிரிக்கா அணியும் நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நியூயார்க் மைதானத்தின் விளைவால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால், தென்னாபிரிக்கா அணி 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
அதன் பிறகு களமிறங்கிய கிளாஸ்ஸன், மில்லரின் கூட்டணியில் சரிவில் இருந்து மீண்டது. தட்டி தட்டி விளையாடிய கிளாஸ்ஸன் 46 ரன்களும், அவருடன் இணைந்து விளையாடிய மில்லர் 29 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனை தொடர்ந்து 114 என்ற எளிய இலக்கை எடுப்பதற்கு வங்கதேச அணி பேட்டிங் களமிறங்கியது. தென்னாபிரிக்கா பேட்டிங்கை போலவே தொடக்கத்தில் 50-4 என தடுமாறிய வங்கதேச அணி, டவ்ஹித் ஹ்ரிடோயின் நிதான ஆட்டத்தால் 16 ஓவர்களில் 87-4 என சரிவிலிருந்து மீண்டு நல்ல நிலைக்கு திரும்பியது.
கடைசி 3 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நன்றாக விளையாடி கொண்டிருந்த டவ்ஹித் 37 ரன்களில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் போட்டியானது மேலும் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேசவ் மகாராஜ் அந்த ஓவரை வீசினார். சிறப்பாக வீசிய அவர் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் தங்களை தக்கவைத்து அடுத்த சுற்றான சூப்பர்8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.