உங்க வீடு வடக்கு பார்த்து இருக்கிறதா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!
வடக்கு பார்த்த வாசல் -வடக்கு நோக்கிய வீடு எந்த ராசிக்கு சிறந்தது, செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக வடக்கு திசையானது குபேரனுக்கு உகந்த திசையாகவும், புதன் பகவானின் அம்சமாகவும் கூறப்படுகிறது. குபேரன் திருமால் மற்றும் லட்சுமியின் அம்சமாக உள்ளவர். புதன் பகவான் செல்வத்தையும் ஐஸ்வரியத்தையும் அள்ளித் தருபவர்.
வடக்கு பார்த்த தலைவாசல் இருப்பவர்களுக்கு இவர்களின் ஆசி கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. சிறு தொழில் செய்பவர்கள் வடக்கு பார்த்து தலைவாசல் இருப்பது தொழிலில் விருத்தியை ஏற்படுத்தும் .விரயத்தை தடுக்கும்.
வாடகை வீடு வடக்கு பார்த்து இருந்தால் விரைவில் சொந்த வீடு அமையும் என்றும் கூறப்படுகிறது .மேலும் நீங்கள் சம்பாதிக்கும் பணம் வீண் செலவு ஆகாமல் இருக்கும்.
வடக்கு பார்த்த வீடு உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை:
வடக்கு பகுதியில் நிலம் வாங்குகிறீர்கள் என்றால் தென்மேற்கு பகுதியில் ஆறு, குளம் ,பள்ளத்தாக்கு வராமல் பார்த்து வாங்க வேண்டும் .மேலும் வடகிழக்கு பகுதிகளில் உயரமான மலைகள் வராமலும் இருக்க வேண்டும் .
அது மட்டுமல்லாமல் வடக்கு பகுதி காலியாக இருப்பது நல்லது. தென்மேற்கு பகுதி உயரமாக இருக்கலாம். காம்பௌண்ட் சுவர் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் உயரமாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வடக்கும் கிழக்கும் உயரமாக இருக்கக் கூடாது.
அப்படி இருந்தால் அது வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்தி வீட்டில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். வடக்கு பகுதியில் உயரமான மரங்களை வளர்க்கக்கூடாது. தென்மேற்கு பகுதியில் மரங்களை வளர்த்துக் கொள்ளலாம்.
காம்பௌண்ட் சுவர்களை விட கேட் உயரமாக வைக்கக் கூடாது. பாத்ரூம் வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி தென்மேற்கு பகுதியில் இருப்பது நல்லது.
விருச்சிகம் ,கடகம் ,மீனம் போன்ற ராசியினரும் புனர்பூசம் சுவாதி நட்சத்திரக்காரர்களும் வடக்குப் பார்த்து தலைவாசல் அமைத்துக் கொண்டால் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும்.