வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது.! நவீன் பட்நாயக் திட்டவட்டம்.!
ஒடிசா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், ஒடிசா ஆளும் அரசியல் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான வி.கே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் ANI செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் 5 முறை தொடர்ந்து முதலைவராக பொறுப்பில் இருக்கிறார். ஒடிசா சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிககளுக்கான என இரு தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. 3 கட்ட தேர்தல் நிறைவுற்ற நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஒடிசா ஆளும் அரசை எதிர்த்து விமர்சனம் செய்ய எதிர்க்கட்சிகள் உபயோகிக்கும் முக்கிய பெயர் வி.கே.பாண்டியன், தமிழகத்தை பூர்வீமாக கொண்ட வி.கே.பாண்டியன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். தற்போது ஒடிசா அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவராக மாறியுள்ளார். முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும் முக்கிய செயல்திட்டதுறை (5T) இவரது கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அதனால் வி.கே.பாண்டியன் தான் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நவீன் பட்நாயக், தற்போது முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் நவீன் பட்நாயக் பேட்டி அளிக்கையில் அவர் கூறுகையில், வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. இது அபத்தமான விமர்சனம். நான் முன்பு இருந்தே இது பற்றி அடிக்கடி கூறி வருகிறேன். இது பழைய குற்றச்சாட்டு. அதில் எந்த உண்மையும் இல்லை என குறிப்பிட்டார்.
மேலும், பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சுற்றி வரும் பேச்சுக்கள் அனைத்தும் மிகைப்படுத்திய பேச்சுக்கள். இந்த விமர்சனங்கள் எப்படி வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கருத்தை முன்வைக்கும் பாஜக, அதிக விரக்திமடைந்து உள்ளது. பாஜகவின் புகழ் ஏற்கனவே குறைந்து வருகிறது. தற்போது அவர்கள் மீது மக்களுக்கு மேலும், அவநம்பிக்கை உருவாகி வருகிறது.
நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது, நான் அதை சிறப்பாக நடத்தி வருகிறேன் என்று நினைக்கிறேன் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.