கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாமாம்..!ஏன் தெரியுமா?
கடுக்காய் -கடுக்காய் பொடியின் மருத்துவ குறிப்புகள் மற்றும் கடுக்காயை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழி உள்ளது. ஆமாங்க.. கடுக்காயில் உடல் ,மனம் ,ஆன்மாவை தூய்மை செய்யும் தன்மை உள்ளது என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
கடுக்காய், சித்தா ஆயுர்வேதத்தில் பல மருந்துகளும் லேகியமும் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ளது. ஈரான் நாட்டில் மலச்சிக்கல், ஞாபக மறதி, மற்றும் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கடுக்காயை பயன்படுத்தும் முறை:
கடுக்காயை அதன் விதைகளை நீக்கி விட வேண்டும் .ஏனெனில் இது நச்சுத்தன்மை கொண்டது. அதன் சதை பகுதியை மட்டும் பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். இதன் பொடியை கால் தேக்கரண்டி அல்லது அரை தேக்கரண்டி வரை சூடான தண்ணீரில் இரவில் உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் தொடர்ந்து 48 நாட்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு மாதம் இடைவெளி விட்டு பிறகு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை கேட்டு பின் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கடுக்காயின் மருத்துவ குறிப்புகள்:
பொதுவாக நம் உடலில் உஷ்ணம், காற்று, நீர் இவை கூடினாலோ அல்லது குறைந்தாலோ தான் பல நோய்கள் நமக்கு வரும். இந்த கடுக்காய் பொடி அதனை சீராக இயங்கச் செய்யும்.கடுக்காயில் பல வகை உள்ளது.
அதில் பிஞ்சு கடுக்காய் மலச்சிக்கலை போக்கவும், கருங்கடுக்காய் உடலுக்கு அழகு சேர்க்கவும், செங்கடுக்காய் காச நோயை போக்கி மெலிந்த உடலை தேற்றி அழகாக்கவும், வரி கடுக்காய் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கடுக்காய் வயிற்று மந்தத்தையும் போகக் கூடியதாகவும் உள்ளது.
துவர்ப்பு சுவை கொண்ட எந்த ஒரு பொருளுக்குமே ரத்தத்தை சுத்தம் செய்யவும் ,ரத்தம் உறைதலை தடுக்கும் தன்மையும் கொண்டது , கடுக்காய்க்கு அந்த தன்மை உள்ளது .இது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்யும்.
காலையில் இஞ்சியும், மாலையில் சுக்கும், இரவில் கடுக்காய் பொடியும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல நோய்கள் மாயமாகும். தொடர்ந்து 48 நாட்கள் கடுக்காய்பொடியை உட்கொண்டால் கண் பார்வை கோளாறு, காது கேளாமை, வாயு தொந்தரவு, வாய்ப்புண், குடற் புண் ,தொண்டைப்புண், ஆசனவாய் புண், சிறுநீரக எரிச்சல், சிறுநீரகக் கல், மூலநோய், பௌத்திர கட்டி, நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.
“அடுக்கடுக்காய் வந்த பிணியும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்” என்றும் கூறுவார்கள் நமக்கு நிறைய நோய்கள் வந்தாலும் கடுக்காயை வைத்து சிறுசிறு வைத்தியம் செய்தால் அது காணாமல் போய்விடும். சருமத்தில் ஏதேனும் தடிப்பு இருந்தால் கடுக்காய் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து தடவினால் குணமாகிவிடும்.
மேலும் இந்த கடுக்காய் பொடியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே பிளேவனாய்ட்ஸ் சத்துக்கள் இருப்பதால் சருமம் அழகு பெறவும் உதவுகிறது. ஆனால் கடுக்காய் பொடியை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
கடுக்காய் பொடி நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் பின்பற்றப்பட்டது என்பதால் நம்மோடு சென்று விடாமல் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்து சொல்வோம்.