இந்தியா திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா… வெளியானது டிக்கெட் விவரங்கள்..!
பெங்களூரு: ஆபாச வீடீயோக்கள் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நாளை நள்ளிரவு 12 மணி அளவில் பெங்களூரு விமான நிலையம் வரவுள்ளார் என PTI செய்தி குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்பியும், மஜத கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உட்பட சிலர் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் அவர்மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகாரை அடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா, தனது டிப்ளமேடிக் (சிறப்பு) பாஸ்போர்ட் உதவியுடன் ஏப்ரல் 27ஆம் தேதி வெளிநாடு தப்பி சென்றார் என கூறப்பட்டது. அவரை பிடிக்க புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியை நாடியது மத்திய அரசு. மேலும், அவரது டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை கர்நாடக மாநில புலனாய்வு குழுவினர் (SIT) விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியும் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு அதற்கு பதிலளிக்காமல் இருந்து வந்த நிலையில், அவர், சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், என் மீது பொய் புகார் கூறபடுகிறது. நான் வரும் மே 31ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகுவேன் என வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து தற்போது வெளியான தகவலின் படி, ஜெர்மனி முனிச் நகரில் இருந்து பெங்களூருவுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் ஒரு விமான டிக்கெட் பதிவாகியுள்ளது எனவும், அதில் நாளை (மே 30) நள்ளிரவு 12 மணி அளவில் இந்தியா வரவுள்ளார் என PTI செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னர் 2 முறை இதேபோல விமான டிக்கெட் புக் செய்து பிரஜ்வல் ரத்து செய்துள்ளார் என்றும் PTI குறிப்பிட்டுள்ளது.
STORY | Prajwal Revanna books flight from Munich to Bengaluru, likely to reach on Friday midnight
READ: https://t.co/UFAUN7R51a pic.twitter.com/QiJ49cLl2S
— Press Trust of India (@PTI_News) May 29, 2024