24 வருடமாக என்னை விமர்சித்து விரக்தி அடைந்துவிட்டனர்.! – பிரதமர் மோடி.
டெல்லி: 24 வருடமாக என்னை விமர்சித்து எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துவிட்டனர். தற்போது அவர்கள் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். – பிரதமர் மோடி.
நாளையுடன் (மே 29) நாடாளுமன்ற இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைய உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தினை பல்வேறு வகையாக மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் வாயிலாக தனது பிரச்சார கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அண்மையில் ANI செய்திநிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், எதிர்க்கட்சிகள் தன்னை விமர்சிப்பது குறித்து குறிப்பிட்டார். அவர் கூறுகையில், 24 ஆண்டுகளாக (பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த காலம் முதல்) என்னை விமர்சித்து அவர்கள் விரக்திஅடைந்துவிட்டனர் என குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திலேயே எதிர்கட்சியினர் என்மீது 101 முறைகேடுகளை சுமத்தியுள்ளனர். இதனை எங்கள் உறுப்பினர்கள் கணக்கிட்டு வைத்துள்ளனர். தேர்தல் வந்தாலும் சரி, தேர்தல் வராவிட்டாலும் சரி எதிர்க்கட்சியினர் என்னை விமர்சிப்பதை நிறுத்தப்போவது இல்லை. அதில் அவர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது என்று நம்புகிறார்கள். தற்போது அவர்கள் என்னை விமர்சித்து விரக்தி அடைந்துவிட்டனர். அதனால் தற்போது என்மீது வீண் பகுற்றசாட்டுகளை கூறி வருகின்றனர். இதுவும் அவர்கள் இயல்பாகவே மாறிவிட்டது.
அடுத்ததாக, எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக விமர்சித்து வருவது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்த குற்றச்சாட்டை கூறுபவர்களிடம் நீங்களே கேளுங்கள். அவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? நாங்கள் இந்த குப்பையை (விமர்சனத்தை) உரமாக மாற்றி அதிலிருந்து நாட்டுக்கு நல்லவற்றை விளைவிப்போம். மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் வெறும் 34 லட்சம் ரூபாய் தான் ஊழல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 2,200 கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. 2,200 கோடி ரூபாயை நாட்டிற்கு திரும்ப கொண்டு வந்தவர் மதிக்கப்பட வேண்டும். அவர் துஷ்பிரயோகம் செய்யாதவர். எனது அரசு ஊழலை சகித்துக் கொண்டு செல்லாது. அதனை களைந்துவிடும் என்றும் நேர்காணலில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.