IPL2024: வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
அதிகபட்சமாக பெங்களூரு அணியில் விராட் கோலி 33, ரஜத் படிதார் 34, மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். அதே நேரத்தில் ராஜஸ்தான் அணியில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் சந்தீப் சர்மா, சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
173 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே டாம் கோஹ்லர் அதிரடியாக விளையாடி 15 பந்தில் 4 பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்து லாக்கி பெர்குசன் ஓவரில் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி 30 பந்தில் 8 பவுண்டரி அடித்து 45 ரன்கள் எடுத்திருந்தபோது தினேஷ் கார்த்தியிடம் கேட்சை கொடுத்து நடை கட்டினார். அடுத்து ரியான் பராக் களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த துருவ் ஜூரல் வந்த வேகத்தில் வெறும் 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஹெட்மியர், ரியான் பராக் இருவரும் கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 18-வது ஓவரில் ரியான் பராக் 36 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்த 2-வது பந்தில் மற்றோரு வீரரான ஹெட்மியர் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை ரோவ்மேன் பவல் 10* ரன்னுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் அணி நாளை மறுநாள் ஹைதராபாத் அணியுடன் 2-வது குவாலிபயர் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பெற உள்ளது.