புதிய வகை கொரோனா.. முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!
சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது.
2020ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பேரலை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தியது. இதற்கான தடுப்பூசிகளையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தற்போதும், அவ்வப்போது புதுபுது கொரோனா வைரஸ் பல்வேறு பரிமாணங்களில் உருவாகி கொண்டு தான் இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா புதிய வகை தொற்றால் சிங்கப்பூர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தை போல நாள்தோறும் சுமார் 2000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. KP.2 என இந்த தொற்றுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று இந்தியவிலும் பரவியுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 100க்கும் அதிகமானோருக்கு இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் செல்வவிநாயகம் குறிப்பிடுகையில், இந்தியாவில் KP.2 கொரோனா பாதிப்பால் மக்கள் மத்தியில் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 100 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது ஓமிக்ரான் வகை வைரஸின் ஒரு கிளை, KP.2 இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
KP.2 மாறுபாடு KP.1.1 மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது மிக வேகமாக பரவும் நிலை கொண்டுள்ளது. இருந்தாலும், தற்போது அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. KP.2 படிப்படியாக உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் பரவும் தன்மை கொண்டது. பொதுவான அறிகுறிகளான தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், இருமல், தலைவலி, உடல் வலி, காய்ச்சல், நெரிசல், சோர்வு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல வரம்புகளை உள்ளடக்கியது. இந்த KP.2 கொரோனா மாறுபாடு ஆபத்தானது அல்ல என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த புதிய வகை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளவும், முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.