பாரம்பரியமிக்க பருப்பு உருண்டை குழம்பு இதுபோல செஞ்சி கொடுங்க..!
பருப்பு உருண்டை குழம்பு -பாரம்பரியமான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
- கடலை பருப்பு =அரை கப்
- துவரம் பருப்பு =அரை கப்
- தேங்காய் =1 கப்
- சோம்பு =2 ஸ்பூன்
- எண்ணெய் =4 ஸ்பூன்
- சீரகம் =1 ஸ்பூன்
- கடுகு =1 ஸ்பூன்
- வெந்தயம் =1 ஸ்பூன்
- பூண்டு =10 பள்ளு
- பெரிய வெங்காயம் =அரை கப்
- சின்ன வெங்காயம் =அரை கப்
- தக்காளி =2
- புளி =நெல்லிக்காய் அளவு
- வரமிளகாய் =4
- அரிசி மாவு =1 ஸ்பூன்
- மல்லி தூள் =3 ஸ்பூன்
- மிளகாய் தூள் =2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை சுத்தம் செய்து ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு வர மிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்கக்கூடாது. இப்போது அந்த அரைத்த பருப்பில் சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், அரிசி மாவு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் ,வெந்தயம், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .பிறகு அதிலே வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும் .தக்காளி மசிந்து வந்ததும் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்துவிட்டு புளிக்கரைசலையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு தேங்காய் மற்றும் சோம்பை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது இவை கொதித்து வந்தவுடன் உருட்டி வைத்துள்ள பருப்பு உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். போட்ட உடனேயே கரண்டிகளை வைத்து கலந்து விடக்கூடாது. பிறகு இரண்டு நிமிடம் கழித்த பிறகு தான் மற்றொரு புறத்தை திருப்பி வேக வைத்துக் கொள்ளவும் .இப்போது சுவையான மிருதுவான பருப்பு உருண்டை குழம்பு தயார்.