பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும்! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

edappadi palanisamy

சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” தமிழ் நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும் வகையில், சுமார் 80 சதவீதம் போக்குவரத்து வசதிகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது.

போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்தது. இவ்வாறு பொதுமக்களுக்கு சேவை செய்து சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என பல்வேறு செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன.

திமுக ஆட்சி ஏற்பட்ட இந்த 36 மாத காலத்தில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும், இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் விடியா திமுக அரசின் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை. காலாவதியான பஸ்களை ஒட்டியே தீரவேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர, இதுவரை ஒரு பேருந்து கூட வாங்கப்பட்டதாக தெரியவில்லை.

டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஒட்டை-உடைசல் பஸ்கள் இயக்கப்பட்டு, இந்த திராவக மாடல் அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது. பஸ்களின் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுகிறது. பேருந்துகளின் வீல்கள் தனியாக கழன்று ஓடுகின்றன. நடத்துனர் தன் இருக்கையோடு ஓடும் பஸ்சில் இருந்து சாலையில் விழுகிறார். பல பஸ்களில் இருக்கைகள் இருக்க வேண்டிய இடங்களில் பழைய டயர்களை போட்டு வைக்கிறார்கள்.

ஆங்காங்கே மழை பெய்யும் நிலையில், பேருந்துக்குள்ளேயும் மக்கள் குடைபிடிக்க வேண்டிஇருக்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை” என்றார் பேரறிஞர் அண்ணா. அதன் அர்த்தத்தை அனர்த்தமாக்கி தன் குடும்ப மக்கள் சேவைக்காக, விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு போக்குவரத்துத் துறையையே காவு வாங்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியை திரும்பத் திரும்ப பாடாமல் கடன் வாங்கிய 3½ லட்சம் கோடியில், புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திட வலியுறுத்துகிறேன். பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் அச்சமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்