272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

Union Minister Amit shah

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று  379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 20, 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், பிரச்சார வேளைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மை நிரூபிக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி 272 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். கடந்த 2019 தேர்தலில் பாஜக தனித்து 303 தொகுதிகளை வென்று இருந்தது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது மொத்தமாக 353 தொகுதிகளை வென்று இருந்தது. இந்த முறை அதனையும் தாண்டி 400 தொகுதிகளை வெல்வதே தங்கள் இலக்கு அதுதான் தங்கள் பிளான் ஏ என நிர்ணயம் செய்து பாஜக தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் களத்தில் இயங்கி வருகின்றனர்.

தேர்தல் களம் குறித்தும், பிரச்சார யுக்திகள் குறித்தும் பல்வேறு தகவல்களை ANI செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா பகிர்ந்து கொண்டார். அவரிடம், பெரும்பான்மைக்கு 272 இடங்கள் வேண்டும். ஒருவேளை பாஜக இந்த முறை அதனை பெறாவிட்டால், பாஜகவின் பிளான் பி என்னவாக இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமித்ஷா, ஒரு கட்சி தாங்கள் ஜெயிப்போம் என 60 சதவீதத்திற்கு குறைவாக நம்பிக்கை கொண்டிருந்தால் தான் பிளான் பி என மாற்றுவழியை யோசித்து வைத்து இருப்பார்கள்.  ஆனால், அப்படியாக நம்பிக்கை குறைவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் காணவில்லை. 60 கோடி பலம் வாய்ந்த உறுப்பினர்களை கொண்ட பாஜக எங்கள் பிரதமர் மோடியுடன் துணை நிற்கிறது. அவர்களுக்கு ஜாதி, வயது வித்தியாசம் கிடையாது. பாஜக அரசின் சலுகைகள் அனைத்தையும் பெற்றவர்கள் 400க்கும் அதிகமான இடங்களில் பாஜகவை வெற்றி பெற வைத்து விடுவார்கள். 

வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தால் மட்டுமே பிளான் பி உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி 400 இடங்களில் வென்று அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வென்று, இந்திய எல்லைகளைக் காக்கவும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றவும், ஏழைகளின் நலனை உறுதிப்படுத்தவும் பாஜக விரும்புகிறது என்றும் ANI நேர்காணலில் அமித்ஷா குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்