IPL2024: சென்னையை வீழ்த்தி குஜராத் 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி…!
IPL2024: . சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், சென்னை அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடங்கியது முதலில் அதிரடியாக விளையாடி வந்தனர்.
இவர்கள் இருவரின் விக்கெட்டை பறிக்க முடியாமல் சென்னை அணி திணறி வந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினார்கள். இருவருமே தங்களது 50-வது பந்தில் சதம் அடித்தனர். அதன்படி சுப்மன் கில் பவுண்டரி அடித்தும், அதே நேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சன் சிக்ஸர் அடித்து தங்களது சதத்தை பூர்த்தி செய்தனர்.
இதைத்தொடர்ந்து 18-வது ஓவரின் 2-வது பந்தில் சாய் சுதர்சன் 103 ரன்கள் எடுத்து தனது விக்கெட் இழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 104 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த டேவிட் மில்லர் 14* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகள் இழந்து 231 ரன்கள் எடுத்தனர்.
232 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஹானே , ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரச்சின் ரவீந்திரா ரன் அவுட் ஆகி ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த ரஹானே 2-வது ஓவரின் முதல் பந்தில் சந்தீப் வாரியரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.
இதற்கிடையில் கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் சென்னை அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் அடுத்து களம் கண்ட டேரில் மிட்செல், மொயின் அலி இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் அரைசதம் அடித்து 34 பந்தில் 63 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இவர்கள் கூட்டணியில் 109 ரன்கள் சேர்த்தனர். அடுத்து சிவம் துபே களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த மொயின் அலி நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து நூர் அகமதிடம் கேட்சை கொடுத்து 56 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சிவம் துபே 21 , ஜடேஜா 18 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் கடைசி ஓவரில் தோனி 2 சிக்ஸர் விளாசி 26* ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டையும், ரஷித் கான் 2 விக்கெட்டையும், உமேஷ் யாதவ், சந்தீப் வாரியர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இதுவரை சென்னை 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டியில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் குஜராத் அணி 12 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி உள்ளது.