மெக்சிகோ புனித யாத்திரையில் சாலை விபத்து… 14 பேர் உயிரிழப்பு.!
Mexico : மத்திய மெக்சிகோவில் புனித யாத்திரை சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது தென்மேற்கில் உள்ள சல்மா கிறிஸ்தவ தேவாலயம். இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக மத்திய மெக்சிகோ குவானாஜுவாடோ மாநிலத்தில் இருந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் புறப்பட்டனர்.
அந்த பேருந்தானது, கபூலின் – சல்மா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மெக்சிகன் பாதுகாப்பு செயலகம், உடனடியாக மருத்துவ குழு மற்றும் மீட்பு படையினரை அனுப்பியது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த நிலையில், 31 பேரை காயங்களுடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்தின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா.? அல்லது வேறு இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மெக்சிகோ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.