பேசுறவங்க பேசுவாங்க! விமர்சனங்களால் கடுப்பான விராட் கோலி!
Virat Kohli : தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்து பேசுபவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பெங்களுர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி நடப்பாண்டில் செம பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி 500 ரன்கள் எடுத்து இந்த சீசனில் அதிகம் ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் அவர் பந்துகள் அதிகமாக எடுத்துக்கொண்டு ரன்கள் அடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துகொண்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 43 பந்துகளில் 51 ரன்கள் அடித்து இருந்தார். அந்த போட்டியில் விராட் கோலி சரியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி நேற்று பதில் அளித்துள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
அந்த போட்டி முடிந்த பிறகு விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்து பேசியவர்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சற்று கோபத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உண்மையில் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுபவர்களுக்கு நான் சரியாக விளையாடவில்லை என்று தான் தோணும். ஆனால், அதனை பற்றி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை.
ஏனென்றால், என்னை பற்றி விமர்சனங்களை வைப்பவர்களை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். என்னை பொறுத்தவரையில் அணி வெற்றிபெறவேண்டும். அதற்காக எப்படி எப்படி விளையாடவேண்டுமோ அதைப்போலவே நான் விளையாடுவேன். கிட்டத்தட்ட இதுவரை நான் விளையாடிய அணைத்து ஆண்டுகளிலும் அப்படி தான் விளையாடி வருகிறேன்.
என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி தங்கள் சொந்த யோசனைகள் வைத்து எதிர்மறையான விமர்சனங்களை பற்றி உட்கார்ந்து பேசலாம். அவர்களால் பேசாமட்டும் தான் முடியும். ஆனால், ஒரு அணிக்காக களத்தில் நிற்கும்போது அணிக்காக என்ன செய்யவேண்டும் எப்படி விளையாடவேண்டும் என்று விளையாடுபவர்களுக்கு தான் தெரியும்.” என்றும் விராட் கோலி சற்று காட்டத்துடன் பேசியுள்ளார். மேலும், குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.