காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி… ஔரங்கசீப்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு!

pm modi

PM Modi: மக்களவை தேர்தல் பரப்புரையில் ஔரங்கசீப்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர் பேசியது சர்ச்சையானது.

பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கடுமையான பதிலடியும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அப்போது இந்திய மன்னர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என விமர்சித்தார்.

பிரதமர் மோடி கூறியதாவது, இந்திய மன்னர்கள் கொடூரமானவர்கள் என்று காங்கிரசின் இளவரசர் ராகுல் காந்தி கூறுகிறார். இந்து அரசர்களை, சர்வாதிகாரிகள் என்று அவதூறாக பேசி உள்ளார். மக்களின் சொத்துக்களை இந்து மன்னர்கள் பறித்துக்கொண்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

சத்ரபதி சிவாஜி மகராஜ், ராணி சீனம்மா போன்ற சிறந்த ஆளுமைகளை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். இந்து மன்னர்களின் நல்லாட்சி மற்றும் தேசபக்தி இன்னும் நம்மை ஊக்கப்படுத்தி வருகிறது. நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும் மைசூர் அரச குடும்பத்தின் பங்களிப்பு காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்திக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதற்காகவே ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்து மன்னர்களுக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி, நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் செய்த அட்டூழியங்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நமது ஆயிரக்கணக்கான இந்து கோவில்களை அழித்த முகலாய பேரரசர் ஔரங்கசீப்பை ராகுல் காந்தியும், காங்கிரசும் ஒருபோதும் விமர்சித்ததில்லை என்றும் அவர்களுக்கு அது நினைவு இல்லை எனவும் விமர்சித்தார்.

மேலும் பிரதமர் பேசியதாவது, ஔரங்கசீப்பை புகழ்ந்து பேசும் கட்சிகளுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைத்துள்ளது என கடுமையாக விமர்சித்து மீண்டும் பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு வெட்கக்கேடானது என காங்கிரஸ் காட்டமாக பதில் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்திய மன்னர்களும், ஆட்சியாளர்களும் மக்களின் நிலத்தை அபகரிப்பதாகவும், சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டு வந்து அரசியல் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் அதனை தடுத்து நிறுத்தியது காங்கிரஸ் தான் என்றும் ராகுல் காந்தி கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு தான் பிரதமர் மோடி ஔரங்கசீப்பை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்