ஒழுங்கற்ற பந்துவீச்சாளர்…உலககோப்பைக்கு செட் ஆகமாட்டார்! சிராஜை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
Mohammed Siraj : முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என அவரை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பிசிசிஐ நிறுவனம் இன்னும் யாரெல்லாம் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்காமல் இருக்கிறது. இதற்கிடையில், அணியில் இந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் இந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற கூடாது என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட சரியானவர் இல்லை என விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை போட்டியில் விக்கெட் எடுப்பதற்காக கண்டிப்பாக இந்திய அணிக்கு 5 பந்துவீச்சாளர்கள் வேண்டும்.
இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக அணியில் இடம்பெறுவார்கள். மீதமுள்ள 3 வேகப்பந்து வீச்சாளராக இருக்க தான் வாய்ப்புகள் அதிகம். கண்டிப்பாக பும்ரா அணியில் இருப்பார். அவருக்கு அடுத்த பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கும் இருப்பார். ஆனால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆக இருக்கவே முடியாது. ஏனென்றால், அவர் ஒரு போட்டியில் நன்றாகப் பந்துவீசுவார். அதன் பிறகு 10 போட்டிகளில் சரியாக செயல்படமாட்டார். எனவே அவர் உலகக்கோப்பை போட்டிக்கெல்லாம் செட் ஆகமாட்டார்.
என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஒழுங்கற்ற பந்துவீச்சாளர். நான் இதனை சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. நீங்கள் அதை உலகக் கோப்பையில் பார்த்து இருப்பீர்கள். என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டியில் விளையாட வீரர்களை தேர்வு செய்கிறீர்கள் என்றால் டெத் ஓவரில் யார் சிறப்பாக பந்து வீசுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவரை தேர்வு செய்யவேண்டும்.
முகமது சிராஜிக்கு பதிலாக நீங்கள் அவேஷ் கான் தேர்வு செய்து அவரை வைத்து விளையாடலாம். அவேஷ் கான் சிறந்த பந்துவீச்சாளர் அவர் நன்றாக விளையாட கூடிய ஒரு வீரர். கண்டிப்பாக நான் தேர்வாளராக இருந்தா சிராஜை எடுத்து செல்லவே மாட்டேன்” என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.