மோடிக்கு வாக்களியுங்கள்! திருமண அழைப்பிதழில் அச்சடித்த நபர்..வழக்குப்பதிவு செய்த போலீசார்!
PM Modi : தன்னுடைய திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட நபர் மீது உப்பினங்காடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில் ஒருவர் தனது திருமண அழைப்பிதழ் அட்டையில் பிரதமர் மோடி புகைப்படத்தை அச்சிட்டு இந்த முறை ‘மோடிக்கு வாக்களிக்குமாறு’ அச்சிட்டு பிரச்சாரம் செய்த காரணத்தால் அவர் மீது உப்பினங்காடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடபா தாலுகாவின் அலந்தாயா கிராமத்தில் வசித்து வருபவர் சிவபிரசாத். இவர் ஏப்ரல் 18 -ஆம் தேதி தனது திருமணத்திற்கு முன்பு அதற்கான அழைப்பிதழ்களை பலருக்கும் வழங்கி வந்து இருக்கிறார். அந்த அழைப்பிதழில் “மோடியை மீண்டும் பிரதமராக்குவது, திருமணமான தம்பதிகளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசாக இருக்கும். தேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக மோடி மீண்டும் பிரதமராகவே நீடிக்க வேண்டும் எனவே அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ” என்று பிரதமர் மோடி புகைப்படத்தை அச்சடித்து இருந்தார்.
இந்த அழைப்பிதழை அமலாக்க கண்காணிப்பு குழுவினர் பார்த்தபிறகு இதனை அச்சிட சிவபிரசாத் அனுமதி வாங்கி இருக்கிறாரா? என்பதனை பார்த்துள்ளனர். ஆனால், அவர் அதற்கான அனுமதியை பெறவில்லை. இதனையடுத்து, சிவபிரசாத் மற்றும் அழைப்பிதழ் அச்சடித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று அமலாக்க கண்காணிப்பு குழு அதிகாரிகள் உப்பினங்காடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அமலாக்க கண்காணிப்பு குழு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், உப்பினங்காடி காவல்துறையினர் மணமகன் சிவபிரசாத் மற்றும் திருமணம் பத்திரிக்கையை அச்சடித்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதைப்போலவே, கடந்த மாதம் தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒருவர் தனது மகன் திருமணத்தின் போது அந்த திருமண அழைப்பிதழ் அட்டையில் மோடிக்கு வாக்கு அளிப்பதுதான் நீங்கள் மணமகன்- மணமகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.