காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!
Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டில் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் அதனை முறைப்படுத்துவோம் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதுகுறித்து, இன்று டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய தகவலையும் கூறினார். அதில், சாதிவாரி கணக்கெடுப்பை வழக்கமான கணக்கெடுப்பு என்று மக்கள் நினைக்க வேண்டாம். அது தற்போது மக்களின் பொருளாதார நிலை, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு, அதன் பலன்கள், மக்களின் இடஒதுக்கீட்டு தேவைகள் பற்றிய கணக்கெடுப்பும் இதன் மூலம் நடத்தப்படும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் அரசியல் ரீதியில் நான் முன்மொழியவில்லை. அது எனது வாழ்நாள் குறிக்கோள். அதை எக்காரணம் கொண்டு கைவிடமாட்டேன். சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இது எனது கியாரண்டி (உத்தரவாதம்) என்றும் ,
70 ஆண்டுகளுக்கு பிறகு, இது ஒரு முக்கியமான தேர்தலாகும். இப்போது நாட்டின் நிலைமை என்ன, நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி நிகழ்வில் பேசினார்.