ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் ஒருபக்கம் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி முன்வைத்த விமர்சனத்து அக்கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
ராகுல் காந்தி – பினராயி விஜயன்:
மறுபக்கம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கும் – கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கேரளாவில் வார்த்தை போர் நிலவி வருகிறது. கேரள முதல்வர் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்ய, இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அக்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ராகுல் விமர்சனம்:
அதாவது சமீபத்தில் கேரளாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நான் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். ஆனால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என்னை விமர்சனம் செய்கிறார். மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகள் மூலம் மற்ற கட்சி தலைவர்களை கைது செய்து விசாரித்து வருகிறது. பினராயி விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
பினராயி விஜயன் பதிலடி:
ஆனால், பினராயி விஜயனுக்கு அதுபோன்ற சம்பவம் எதும் நடக்கவில்லை என விமர்சனம் செய்தார். இதற்கு கேரளா முதல்வர் பதிலடியும் கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, உங்கள் பாட்டி இந்திராகாந்தி எங்களை ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஜெயிலில் வைத்து இருந்தார்.
நாங்கள் எந்த விசாரணைக்கு அஞ்சியவர்கள் அல்ல, ஜெயில் விசாரணையை நாங்கள் போதுமான அளவில் பார்த்துவிட்டோம். இதனால் அதனை வைத்து எங்களை மிரட்ட முடியாது என்று பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி எனவும் மீண்டும் விமர்சித்திருந்தார்.
சர்ச்சை பேச்சு:
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளாவின் இடதுசாரி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ பி.வி.அன்வர் கூறியதாவது, ராகுலுக்கு காந்தி பெயரை பயன்படுத்த உரிமை இல்லை.
இதனால் அவருக்கு டிஎன்ஏ சோதனை செய்யப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். நேரு குடும்பத்தில் பிறந்தவரா? என்று எனக்கு சந்தேகம் உள்ளது என்றும் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் ஏஜெண்டாக இருப்பாரோ என்று சந்தேகம் கூட வருகிறது எனவும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் புகார்:
கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயனை ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்வர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால் எம்எல்ஏ அன்வருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கேரளா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் எம்.எம்.ஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.