பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

pm modi

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக பாஜக – காங்கிரஸ் நேரடியாக களமிறங்கும் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியின் விமர்சன பேச்சு

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்த போது பேசிய விதம் பெரிய அளவில் பேசும்பொருளாக வெடித்துள்ளது. அதில் பேசிய அவர் ” நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம். காங்கிரஸ் கட்சி மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை அனைத்தும்  கணக்கு எடுத்து, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள் என்றும், பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கிட்டு காங்கிரஸ் பிரித்து கொடுக்க முயல்கிறது என்று கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

எழுந்த கண்டனங்கள்

பிரதமர் மோடி இப்படி பேசிய காரணத்தால்  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட  பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய  கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சல்மான் குர்ஷித்,  குர்தீப் சத்பால் அபிஷேக் மனு சிங்வி, உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர்.

பிரதமர் மோடி மீது புகார்

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு இந்த அளவிற்கு பேசும்பொருளாகி இருக்கும் நிலையில், அவர் மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்த கட்சியினுடைய  மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அந்த புகாரில் ” பிரதமர் பதவியில் இருக்கும் மோடி ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பேசி இருப்பது தவறு. அவர் இப்படி பேசிய காரணத்தால் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று புகார் அளித்துள்ளார்.

I.N.D.I.A கூட்டணி மொத்தமும் பயத்தில் மூழ்கியுள்ளது.

பிரதமர் மோடி பேசிய இந்த விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் மதுப்பூரில் பேசும்போது ” நான் மக்கள் முன் சில உண்மைகளை கூறினேன். நான் கூறிய அந்த உண்மைகளினால் காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A கூட்டணி மொத்தமும் பயந்து இருக்கிறது.  மக்கள் சம்பாதித்த சொத்துக்களை அபகரித்து அவர்களின் சிறப்பு மக்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்துகொண்டு இருக்கிறது.

நான் முன்னதாக பேசிய போது காங்கிரஸ் மற்றும் கூட்டணிகளின் அரசியலை நான் அம்பலப்படுத்திய காரணத்தால் ​​அவர்கள் கோபமடைந்து, என் மீது தவறான விமர்சனங்களை வைத்து கொண்டு வருகிறார்கள். நீங்கள் உருவாக்கிய கொள்கையை நீங்களே ஏற்க எதற்காக  பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அதன் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்