கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டி மாணவ, மாணவிகள் ஆட்சியரகத்தில் போராட்டம்.
கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்தனர்.
அவர்களுக்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமைத் தாங்கினார்.
முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், “தமிழக அரசு கல்வி உதவித் தொகையை குறைப்பதற்கு சட்டமன்ற ஒப்புதலோ, அமைச்சரவையின் ஒப்புதலோ பெறவில்லை. ஆனால், ஆதிதிராவிட நலத்துறை அரசாணையின் கீழ் இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை குறைத்து ஆணையிட்டு உள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிக்கும் 1½ லட்சம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுய உதவி கல்லூரிகளில் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை முழுமையாக வழங்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். கல்வி கட்டணக் குழு இந்தாண்டுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி ஆணையிட்டு உள்ளது.
அதன்படி ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட தொகையை வழங்காமல், தற்போது ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டின்படி வழங்கப்பட்டு வந்த ரூ.70 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு விடுதியும், உணவும் கூடுதலாக கல்லூரி தாளாளர்கள் வழங்கி வந்தனர்.
கல்வி உதவித் தொகை குறைப்பால் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பார்கள்.
எனவே, கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.