ஐபிஎல் 2024: லக்னோவை துவம்சம் செய்த பிலிப் சால்ட்… கொல்கத்தா அபார வெற்றி..!
ஐபிஎல் 2024: கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டி ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும், கேஎல் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டை பறித்தார். கொல்கத்தா அணி 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன், பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கினர்.
2-வது ஓவரிலே சுனில் நரேன் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 7 ரன் எடுத்து 4-வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்ததால் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் கொல்கத்தா 2 விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிலிப் சால்ட் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
இதற்கு இடையில் அதிரடியாக விளையாடி வந்த பிலிப் சால்ட் 47 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர் என மொத்தம் 89*ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதே நேரத்தில் மறுபுறம் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்தில் 38* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி தலா மூன்று போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.