வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர்… ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய 19-ஆவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரூ அணியும் மோதியது. இப்போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்வென்ற ராஜஸ்தான் பந்துவீச தேர்வு செய்ய முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக விராட் கோலி சதம் விளாசி 113* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 72 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் விளாசினார். இவரைத் தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸ் 33 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 44 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து 184 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்தியிலேயே தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாகவும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க பெங்களூர் அணி திணறி வந்தனர். இதற்கிடையில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் இருவருமே அரைசதம் விளாசினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெங்களூரூ அணி 15 ஓவரில் இவர்களின் கூட்டணியை பிரித்தனர்.
15 ஓவரில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் இருவர் கூட்டணியில் 148 ரன்கள் குவிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் 8 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 69 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரியான் பராக் 4 , துருவ் ஜூரல் 2 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
களத்தில் விளையாடி வந்த தொடக்க வீரர் பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 100* ரன்கள் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூரூ அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவி 8-வது இடத்தில் உள்ளது.