ஐபிஎல் 2024 : குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி..!
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 48 பந்தில் 89* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதே நேரத்தில் சாய் சுதர்சன் 33 ரன்களும், கேன் வில்லியம்சன் 26 ரன்களும், ராகுல் தெவாடியா 23* ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியில் ரபாடா 2 விக்கெட்டையும், ஹர்பிரீத் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை, காரணம் கேப்டனும், தொடக்க வீரருமான ஷிகர் தவான் 2 ஓவரின் முதல் பந்தில் போல்ட் ஆகி 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரப்சிம்ரன் சிங் களமிறங்க மறுபுறம் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் சற்று அடித்து விளையாடினார்.
ஆனால் அது நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை 6-வது ஓவர் வீசிய நூர் அகமது பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் போல்ட் ஆகி 22 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து சாம் கரண் களமிறங்க ஏற்கனவே களத்தில் இருந்த பிரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தபோது மோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்த சில நிமிடங்களில் சாம் கரண் 5 ரன் எடுத்து நடையை கட்டினார். இதனால் பஞ்சாப் அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷஷாங்க் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 61* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் நூர் அகமது 2 விக்கெட்டையும், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
பஞ்சாப் மற்றும் குஜராத் அணி தலா 4 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டியில் தோல்வியையும் பெற்றுள்ளது.