ஓ.பன்னீர்செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னம்.! தேர்தல் ஆணையம் விளக்கம்.!
Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. மற்ற பன்னீர்செல்வம் பெயர் கொண்ட வேட்பாளர்களுக்கு வாளி, திராட்சை, பட்டாணி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் கடந்த முறை வரையில் நடைபெற்ற சில தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடம் இருந்தது. இந்த முறை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் சென்றும் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. அதற்கு முன்னதாகவே தெலுங்கு திராவிட கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் முதுக்கப்பட்ட விட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இப்படியான சூழலில், சுயேச்சை வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னம் எப்படி ஒதுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் அண்மையில் ஒரு பொதுவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதாவது எந்த ஒரு பதிவு செய்யபட்ட கட்சிக்கும் ஒதுக்கப்படாத விருப்ப பட்டியலில் இருக்கும் சின்னத்தை, பதிவு செய்யப்படாத கட்சிக்கு ஒதுக்கினால், அந்த பதிவு செய்யப்படாத கட்சி, போட்டியிடாத தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.