மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு.
கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதன்பின் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதன்படி, சுமார் 30 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், மத்திய அரசு இன்னும் தமிழ்நாட்டுக்கான உரிய நிவாரண தொகையை வழங்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வந்தது.
இந்த நிலையில், வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்து இருந்த நிலையில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடி இடைக்கால நிவாரணநிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.