கச்சத்தீவு விவகாரம்! 21 முறை முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் – ஜெய்சங்கர் விளக்கம்!

Jaishankar

Kachchatheevu: கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

ஆனால், இரண்டு ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974இல் விளக்கம் தரப்பட்டது. அதில் மீனவர்கள் உரிமை பாதுகாக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பப்பட்டது.

கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது மாநில அரசுடன் ஆலோசிக்கவில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டடு, 1,175 மீன்பிடி படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவை விட்டு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். மேலும், கச்சத்தீவு விவகாரத்தை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டிய நிலை இருந்தாலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது போல இப்பிரச்னையை அணுகியுள்ளன. மீனவர்கள் விடுதலை தொடர்பாக அறிக்கை விடுவது நல்லது தான். ஆனால் விடுதலைக்கான முழு வேலையும் மத்திய பாஜக அரசு தான் செய்கிறது என விளக்கமளித்தார்.

இதனிடையே, கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. காங்கிரஸும், திமுகவும் குடும்ப ஆட்சி செய்கின்றன.

அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்