பதில் சொல்லுங்க பிரதமரே… அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வர்.!

PM Modi - Tamilnadu CM MK Stalin

MK Stalin : பிரதமர் மோடிக்கு 3 கேள்விகள் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கடல் எல்லை பகுதியில் இருந்த கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கபெற்ற தகவல்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று விளக்கம் அளித்து இருந்தார்.

தற்போது, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் தனது கருத்தை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. காங்கிரசை ஒருபோதும் நம்ப கூடாது என மீண்டும் உறுதியாகியுள்ளது.

கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை நிலைபாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது என்றும் பிரதமர் மோடி தனது எஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை அடுத்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கேள்வி கேட்கும் விதமாக ஓர் பதிவையிட்டு அதில் மூன்று கேள்விகளை குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பதிவில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பாமல் இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என அந்த பதிவில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்