தமிழிசைக்கு ஒரு நியாயம்.? நிர்மலாவுக்கு ஒரு நியாயமா.? கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்.!

Nirmala Sitharaman - Tamilisai Soundarajan

Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி அல்லது தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர், தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார். மேலும், தன்னிடம் அதற்கான போதிய பணம் இல்லை என்றும் அண்மையில் விளக்கம் அளித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இது குறித்து இன்று சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், மாநில தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நியாயம், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஒரு நியாயமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி தனது விமர்சனத்தை முன் வைத்தார்.

அவர் மேலும் பேசுகையில், விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த எல்.முருகன் நீலகிரி தனி தொகுதியில் போட்டியிடுகிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னையில் போட்டியிடுகிறார். ஆனால், மத்திய அமைச்சர்களாக இருக்கும் சென்னை சேர்ந்த ஜெய்சங்கர் தென் சென்னையில் ஏன் போட்டியிடவில்லை.? திருச்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் ஏன் திருச்சியில் போட்டியிடவில்லை.?

அதற்குக் காரணமாக தன்னிடம் பணம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஓர் நிதி அமைச்சரிடம் பணம் இல்லை. ஆனால் மத்திய இணை அமைச்சரிடம் பணம் இருக்கிறதா.? அல்லது ஆளுநராக இருந்த தமிழிசையிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா.?

வெயிலில் சுற்றி பிரச்சாரம் செய்வதற்கு, மக்களிடம் களப்பணி ஆற்றுவதற்கும், விளிம்புநிலை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், எந்தவித சிரமமும் இன்றி ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் போன்றோர் தேவைப்படுகிறார்கள். இதுதான் பாஜகவின் சமூகநீதியா.? இதற்கு பாஜக தலைவர்கள் எந்தவிதமான மழுப்பலும் இல்லாமல் பதில்களை அளிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்