முதல் போட்டியிலேயே இப்படியா! மோசமான சாதனை படைத்த குவேனா மஃபாகா!!
Kwena Maphaka : மும்பை அணிக்காக விளையாடிய 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா மோசமான ஐபிஎல் சாதனையை படைத்துள்ளார்.
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிகாக விளையாடுவர் தான் 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா. கடந்த ஜனவரி மாதம் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் குவேனா மஃபாகாவின் பெயர் வெளியே தெரிந்தது. அந்த சமயமே பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து குவேனா மஃபாகாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி, நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவும் செய்தார். அவர் விளையாடும் முதல் ஐபிஎல் போட்டி என்பதால் அவருடைய பந்துவீச்சில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் குவேனா மஃபாகாவின் பந்துவீச்சை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டனர் என்றே கூறலாம்.
ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் குவேனா மஃபாகா 4 ஓவர்கள் பந்துவீசி 66 ரன்கள் கொடுத்தார். அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்கவும் முடியவில்லை. U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய இந்த இளம்வீரர் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியிலே மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அது என்ன சாதனை என்றால் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியில் பந்துவீசி அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற சாதனை தான். நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 66 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம் அறிமுகமான முதல் போட்டியில் பந்துவீசி அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை குவேனா மஃபாகா படைத்தார். இதற்கு முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மைக்கேல் நீசர் 62 ரன்கள் கொடுத்து இந்த மோசமான சாதனையை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,