’இந்தியா’ வென்றால் கல்வி, விவசாய கடன் ரத்து: மு.க ஸ்டாலின்
C.M.Stalin: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன், விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசும் போது, “மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள், தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ₹1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர்
புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு ஒன்றிய பாஜக அரசு என்ன செய்தது..?
சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28% ஜிஎஸ்டி வரி போட்ட கட்சிதான் பாஜக!”
தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் விலையை உயர்த்தியது யார்..? மகளிர் தினத்தன்று கியாஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும் தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை.
தேர்தல் வரும்போது அவருக்குக் கருணை வந்துவிடுகிறது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சி.. நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன், விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற பிரதமர் நாடகம் போடுகிறார்,மக்கள் யாரும் பிரதமர் மோடியை நம்பவில்லை”
”அதே போல தமிழக உரிமைகளை மத்தியில் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. மோடிக்கு எதிராக வாய் திறக்காத அவர் ஆளுநரின் செயல்பாடுகளையும் கண்டிப்பதில்லை. பாஜக தனியாக வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியுடன் வந்தாலும் அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது” என்றார்.