சிஏஏ சட்டம்! நாங்கள் அமல்படுத்தமாட்டோம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி!
Pinarayi Vijayan : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, அந்த சட்டம் அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்
இதன்பின், விரைவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து அந்த சட்டத்தை எங்களது மாநிலங்களில் அமல்படுத்த விடமாட்டோம் என கூறினர். இந்த சூழலில் மக்களவை தேர்தல் மிக விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுக்கு பின்னர் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமல்படுத்தப்படுவதாக நேற்று (மார்ச் 11) மத்திய அரசு அறிவித்தது தான் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது.
தேர்தல் நேரத்தில் பிளவுவாத அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. மதசார்பற்ற இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அதன் மூலம் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது என கூறி எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளது.
Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பதிவில், தேர்தலையொட்டி சிஏஏ சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களைப் பிளவுபடுத்துவதற்கும், வகுப்புவாத உணர்வுகளை தூண்டுவதற்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குலைப்பதற்கும் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது.
சம உரிமை உள்ள இந்தியக் குடிமக்களை அடுக்கடுக்காக பிரிக்க மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் போது, முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பது, அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.
Read More – குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.!
இது மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை வரையறுப்பதற்கு சமம். மனிதநேயம், நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியம் மற்றும் அதன் மக்களுக்கு ஒரு வெளிப்படையான சவால். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் சட்டமன்றம் கேரளா. கேரளாவில் என்பிஆர் அமல்படுத்தப்படாது என்று கேரள அரசு அறிவித்தது. சிஏஏ, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மக்களின் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், தனது வகுப்புவாத கொள்கையை செயல்படுத்துவோம் என்று கூறுகிறார்கள். எனவே, முஸ்லீம் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் சிஏஏ சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று எங்கள் அரசு பலமுறை கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும் என்று இவ்வாறு கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.