தமிழகத்தில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!
தமிழகத்தில் இன்று ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 8,801 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 1615 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி அருகாமையிலும், ஈவினிங் பஜார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கேயும் 9 கோடியே 75 இலட்சம் ரூபாய்செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் சுரங்க நடைபாதை திறந்து வைக்கிறார்.
READ MORE-பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!
நீர்வளத்துறை சார்பில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 111 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பில், கொள்ளிடம் ஆற்றில் 414 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நீரொழுங்கி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 4.48 கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஈப்புகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை முதல்வர் திறந்து வைக்கிறார்.
அதேபோல தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில், 7300 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்கள், 209 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் 67 துணை மின் நிலையங்களில் 1089 எம்.வி.ஏ அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட 69 மின் மாற்றிகளின் செயல்பாடு மற்றும் நாகப்பட்டினத்தில் 4 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடத்தையும் திறந்து வைக்கிறார்.
READ MORE- பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…
மேலும், நீர்வளத்துறை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.