நிலவில் “ஒடிசியஸ்” விண்கலத்தை தரையிறக்கி அமெரிக்க தனியார் நிறுவனம்..!
டெக்சாஸை தளமாகக் கொண்ட “இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்” என்ற நிறுவனம் நேற்று மாலை நிலவில் லேண்டர் ‘ஒடிஸியஸ்’ விண்கலத்தை தரையிறக்கியது. இதனால் நிலவில் முதல் விண்கலத்தை தரையிறக்கி அமெரிக்க தனியார் நிறுவனம் என்ற வரலாறு சாதனை படைத்ததுடன், 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலவை சென்றடைந்த முதல் அமெரிக்க விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் லேண்டர் ‘ஒடிசியஸ்’ நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறக்கிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா மீண்டும் சந்திரனை அடைந்துள்ளது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்தார்.
இதன் மூலம் 1972-ம் ஆண்டு அப்பல்லோ 17 பயணத்திற்குப் பிறகு சந்திரனை அடைந்த முதல் அமெரிக்க விண்கலம் இதுவாகும். நாசாவின் பல அறிவியல் கருவிகளும் இந்த லேண்டர் வழியாக அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இயக்குநரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான டிம் கிரைன் கூறுகையில்” எங்கள் கருவி சந்திர மேற்பரப்பில் இருப்பதையும், தகவல்தொடர்புகளைப் பெறுகிறோம் என்பதையும் சந்தேகமின்றி உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார்.
READ MORE- இஸ்ரேல் – ஹமாஸ் போர்..! காசாவில் மேலும் 40 பேர் பலி.. 100 பேர் காயம்..!
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து ‘இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்’ நிறுவனம் கூறுகையில் “தகவல் தொடர்பு பிரச்னையை சமாளித்து லேண்டர் “ஒடிசியஸ்” எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளதாக விமானக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதிசெய்து தரவுகளை அனுப்பத் தொடங்கினர். தற்போது, சந்திர மேற்பரப்பில் இருந்து அனுப்பப்பட்ட முதல் படத்தை ‘டவுன்லிங்க்’ செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என கூறியது.
நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கா இந்த சாதனையை பெற்றுள்ளது. சந்திரயான்-3 லேண்டர் விக்ரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறக்கியது.