வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுமார் 1 மணி நேரம் 57 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். இந்த வேளாண் பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரிப்புகள் மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார். பட்ஜெட்டில் இடம்பெற்ற இதுதொடர்பான அறிவிப்பை வாசித்த அமைச்சர், பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் விதம், 2024-25ம் ஆண்டில் 100 இளைஞர்களுக்கு வங்கி கடன் உதவியுடன் கூடிய ஏதாவதொரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளே! பயிர் காப்பீடு, நெல் கொள்முதல், கரும்பு சாகுபடி… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப்பயிர் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முக்கிய பயிர் வகையில், எண்ணெய் வித்துக்கள் பரப்பளவை விரிவாக்கம் செய்திட ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 15,810 மெட்ரிக் டன் பயிர் வகையில், எண்ணெய் வித்துக்கள் விதைகள் 50-60% மானியத்துடன் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், பயிர் சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க 2,482 கிராம ஊராட்சிகளிலும் கிராம வேளாண் முன்னேற்ற கழகம் நிறுவப்படும். அதன்படி, கிராம வேளாண் முன்னேற்ற குழுக்கள் அமைக்க ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு முதலீட்டு கடனுக்கான, வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார்.