சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த 30ம் தேதி சண்டிகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன.
இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், சண்டிகர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, விசாரணைக்கு சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அமலாக்கத்துறை 6-வது சம்மனுக்கும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்..!
தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து நீங்கள் செய்தவற்றை காணொளியை பார்த்தோம். வாக்குச் சீட்டுகளில் எழுதும்போது கேமராவைப் பார்த்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?, வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு என்ன எழுதினீர்கள் என தேர்தல் நடத்திய அதிகாரிக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
8 வாக்குச்சீட்டுகளில் டிக் என குறிப்பிட்டதாக தலைமை நீதிபதியிடம் அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்பின் தலைமை நீதிபதி கூறியதாவது, சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்தது அதிர்ச்சியும், கவலையும் தருகிறது. தேர்தல் அதிகாரியின் செயல் ஜனநாயகத்தில் ஒருபோதும் அனுமதிக்ககூடாது. சண்டிகர் மேயர் தேர்தலில் புதியதாக தேர்தல் நடத்த அவசியமில்லை.
8 வாக்குச்சீட்டுகள் செல்லாது என நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்குச்சீட்டுகளை நாளை பிற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து வீடியோ பதிவையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தலைமை உத்தரவிட்டார்.
மேலும், புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்க மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி அரசியல் கட்சியை சாராதவராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி, இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
எனவே, நாளை மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜகவின் மனோஜ் சோங்கர் நேற்று ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.