கோவிலுக்கு சென்ற முழு பலனையும் பெற இந்த முறைகளையும் பின்பற்றுங்கள்..!
நம் கோவிலுக்கு சென்று வந்த முழு பலனையும் அடைய வேண்டும் என்றால் கோவிலின் தல விருட்சத்தை வழிபாடு செய்ய வேண்டும். தல விருட்சத்தின் சிறப்புகள் மற்றும் அதை ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
ஒரு ஆலயத்திற்கான சிறப்பு மற்றும் அடையாளம்:
ஒரு ஆலயம் என்றால் அங்கு மூர்த்தி, தலம் , தீர்த்தம், விருட்சம் ஆகியவை இருக்கும். மூர்த்தி என்றால் அங்குள்ள தெய்வமாகும். தலம் என்றால் தெய்வம் அமைந்துள்ள ஊராகும். தீர்த்தம் என்றால் அங்குள்ள புனித நீர், விருட்சம் என்றால் அக்கோவிலில் அமைந்துள்ள மரம்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு தல மரங்களும் உள்ளது. உதாரணமாக சிவன் கோவில்களில் வில்வ மரம் இருக்கும், அதேபோல் மாரியம்மன் கோவில் என்றால் வேப்பமரம் இருக்கும். இதுபோல் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய அந்த இடத்திற்கும் உரிய மரங்கள் இருக்கும்.
தல விருட்சத்தின் சிறப்பு:
கருவறைக்குள் இருக்கும் இறைவனுக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளதோ அதே அளவு சக்தியையும் ஆற்றலையும் அந்த தல விருட்சத்திற்கும் இருக்கும். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு தல மரத்தையும் வழிபட்டால் மட்டுமே நம் முழு பலனையும் பெற முடியும்.
ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் தான் கருவறைக்குள் இருக்கும் தெய்வம் அருள் புரிவார். பிறகு 12 ஆண்டுகள் கழித்து மறு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்றால் அந்த தெய்வத்தின் ஆற்றல் தல விருட்சத்திற்கு போய்விடும். தல விருட்சத்திலும் 12 ஆண்டுகள் நிலைத்திருக்கும். பிறகும், அதாவது 24 ஆண்டுகளாக கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்றால் அந்த தெய்வத்தின் ஆற்றல் பரகாச வெளியை அடைந்து விடும் என சாஸ்திர நியதிகள் கூறுகிறது.
எனவே கோவிலுக்குச் சென்று வழிபடும் போது அங்குள்ள தல மரத்தையும் வழிபட்டு பிரார்த்தனைகளை கூறி முழு பலனையும் பெறுவோம்.