சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா..? மெட்ரோ.. வடசென்னை.. பூந்தமல்லி..
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,517 கோடி ரூபாய் செலவில் நெமிலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 9 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவில் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
சென்னை சுற்றுவட்டார பகுதி நீர்நிலைகளை பாதுகாக்க, வங்கக்கடலில் கலக்கும் அடையாற்றை மீட்டெடுக்க அரசு தனியார் பங்களிப்போடு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அருகே பூந்தமல்லி பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடிரூபாய் செலவில் கனவு தொழிற்சாலை எனும் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இதில் பட ஷூட்டிங், தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடெக்சன் வேலைகள், விஎப்ஏக்ஸ் வேலைகள் என பல்வேறு திரைப்பட பணிகள் அரசு மற்றும் தனியார் ஒப்பந்தத்தின் படி செயல்படுத்தப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி!
வடசென்னை பகுதியில் ரூ.75 கோடி செலவில் புதிய குடியிருப்புகள், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ரூ.53 கோடி செலவில் புதிய உயர்தர சிகிச்சை கட்டடம், ராயபுரம் மருத்துவமனையில் ரூ.96 கோடிக்கு புதிய கட்டடம், பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் 55 கோடி செலவில் 3 புதிய தளங்கள், 11 கோடி ரூபாய் செலவில் தொழிற்பயிற்சி மையங்கள், 30 கோடி ரூபாய் செலவில் ஏரிகள் தூர்வாரும் பணிகள், ரூ.45 கோடி செலவில் 10 பள்ளிகள் சீரமைப்பு என சுமார் சென்னை மாநகருக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகள் ரூ. 63,246 கோடி செலவில் 119 கி.மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை, 2025ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோயம்பேடு முதல் ஆவடி , பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ சேவையை இரண்டாம் கட்டத்தின் நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.