நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை..!
நடிகர் விஜய் கடந்த 2-ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி ” தமிழக வெற்றி கழகம்” என தனது கட்சிக்கு விஐய் பெயர் வைத்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்ற நிலையில், சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்தனர்.
இதற்கிடையில் கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” என்ற இலக்கணப்பிழை இருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர். இதனால்தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து “தமிழக வெற்றிக் கழகம்” என்று மாற்ற விஜய் ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்திலும் “தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட தமிழக வெற்றிக் கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.