அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கொடுங்க.. விவசாய சங்க தலைவர்!
விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்பினர் டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை நேற்று முன்தினம் தொடங்கினர்.
கடந்த முறை போன்று இம்முறை விவசாயிகள் போராட்டம் வெடித்துவிட கூடாது என்று டெல்லிக்குள் நுழையும் வழியெல்லாம் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், எல்லைகளில் விவசாயிகளால் குவிந்துள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தடுப்புகளை பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெலிக்குள் நுழைய முயன்று வருகின்றனர்.
டெல்லியில் ரயில் மறியலில் ஈடுபடும் விவசாயிகள்.? மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..
விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதனால், டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில், மூன்றாவது நாளான இன்று விவசாயிகள் மதியம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. இன்று மாலை விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில், எங்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு.
இதனால் தேசிய தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். அனைத்து நுழைவுச் சாவடிகளிலும் உள்ள தடுப்புகளை அரசு அகற்ற வேண்டும். இன்று மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம். அப்போது எங்களது கோரிக்கைகளை முன்வைப்போம். இந்த சந்திப்பில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.