ம.பி.யில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி.. 60க்கும் மேற்பட்டோர் காயம்!
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தூர் மற்றும் போபாலில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, பட்டாசு ஆலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக பட்டாசுக்கள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கர்நாடக முதல்வருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!
அதுமட்டுமில்லாமல், பட்டாசு ஆலை அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவியதால் பதற்றமாக காணப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை ஹெலிகாப்டர் மூலம் ஹர்தாவுக்கு விரைந்து செல்லுமாறு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார்.
இந்தூர், போபால் மற்றும் மாநில தலைநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அவசரநிலைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.