இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தொகுதி.. இன்று பேச்சுவார்த்தை..!
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும்தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இன்று திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீடு குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு பிற்பகல் இந்திய கம்யூனிஸ்ட் உடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால், இன்றைய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகளை கேட்க உள்ளதாகவும் , அல்லது ஒரு மாநிலங்களவை மற்றும் ஒரு மக்களவை சீட் கேட்க உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நாளை மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.