அரசியலில் என்ட்ரி ! சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக விஜய் அறிவிப்பு!
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதால் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு ஓய்வு பெறுவதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இது பற்றி விஜய் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். அதன்படி, விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் “தமிழகவெற்றிகழகம் ” என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகுவது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் விஜய் ” என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
“தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.!
எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
மேலும், விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான 50 % படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. முழுவதுமாக படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முடியும் என கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பின் அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிப்பார். அந்த படம் முடிந்த பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.