ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த கைதுக்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த் சோரன். இதனால் ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில புதிய முதலமைச்சராக பதவியேற்கிறார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து நேற்று ராஞ்சி நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஹேமந்த் சோரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பரபரக்கும் ஜார்கண்ட் அரசியல் களம்.! ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கான தனி விமானம் ரத்து.!
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையிடாமல் உச்சநீதிமன்றம் வந்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். இதனால், அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை ஹேமந்த் சோரன் தரப்பு நாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.