தமிழகத்திற்கு ஏன் ஓரவஞ்சனை.? கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்.! முதல்வர் அறிவிப்பு.!
நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெடடை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தேர்தல் நேரம் என்பதால் இந்த பட்ஜெட் முழு பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த பட்ஜெட் குறித்து தனது கண்டனத்தை பதிவிட்டு உள்ளார். எடை போட்டு பார்க்க எதுவும் இல்லாத வெற்று அறிக்கையின தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன் எனவும், இதில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை காட்டியுள்ளனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதல்வர்.! சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்.!
தனது கண்டன அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிடுகையில் ,
இல்லா நிலை பட்ஜெட் :
ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிகிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தையே பட்ஜெட் பரிசளித்துள்ளது. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது ‘இல்லா நிலை’ பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.
பொய் அறிக்கை :
பொருளாதார வளர்ச்சி இல்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து விட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான திட்டத்தின் சூழ்ச்சியாக உள்ளது .
மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவதற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை :
பத்தாண்டுகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-இல் அறிவிக்கப்பட்டு, 2019-இல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்க என்ன காரணம்?
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?
மிக பெரிய துரோகம் :
தமிழ்நாடு அண்மையில் சந்தித்த பேரிடரை தீவிர இயற்கைப் பேரிடர்’ ஆக அறிவிக்க வேண்டும் என்று கோரி, ரூ. 31 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதிக்கு ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்காதது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 இலட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் பற்றிக் குறிப்பிட்ட நிதியமைச்சர், உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை மறந்தது ஏன்?
பாஜகவின் சமூக நீதி :
‘ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்’ ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக நான்கு பிரிவினர்களையும், நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.
அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் ‘பறிப்பதுதான்’ பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி. சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.
புதிய இந்தியா :
2014-இல் நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபோதும், பின்னர் 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும், 2019-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த போதும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது. புதிய இந்தியாவை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். கருப்பு சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.