ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் பட்ஜெட் இது… பிரதமர் மோடி உரை!

pm modi

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தற்போது இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்ததை அடுத்து, நாளை காலை 11 மணிவரை மக்களவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்தார். இந்த நிலையில், ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய பிரதமர், இடைக்கால பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜெட். மத்திய இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்று இருக்கிறது. பெண்கள், ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட் இதுவாகும். பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அதிகளவில் உள்ளன.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம்  ஒரு கோடி வீடுகள் இலவச மின்சார சேவையை பெற முடியும். வருமான வரி விலக்கு திட்டம் நடுத்தர வகுப்பை சேர்ந்த 1 கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது.

மேலும் 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கன்வாடி பணியாளர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். இந்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில், மூலதனச் செலவினம் ரூ.11,11,111 கோடியாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதுடன், இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க வழிவகை செய்யும்.

மேலும், இந்த பட்ஜெட் இந்தியாவின் இளம் வயதினரை பிரதிபலிக்கிறது. அதன்படி, பட்ஜெட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்