ராஜினாமா செய்ய வாய்ப்பு.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ் குமார்..?
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமாரும் மீண்டும் கட்சி மாறுவது குறித்து பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணியை முறித்து கொண்டு இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தலாம் என்று இதைத் தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்து மாலைக்குள் பீகாரில் பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்கலாம் எனவும் இது தொடர்பாக பீகார் மாநில ஆளுநரை இன்று சந்திக்க முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்..!
நிதிஷ் குமாருடன் பாஜகவின் துணை முதல்வர் பதவியேற்கலாம் எனவும் சட்டசபை சபாநாயகர் பதவியும் பாஜக ஒதுக்கீட்டின் கீழ் வரலாம் எனவும் அதே நேரத்தில் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மேலும் பல பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தால் 18 மாதங்களுக்குள் 2-வது முறையாக நிதிஷ் குமார் அணி மாறுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சியை பிடித்தார்.
ஆகஸ்ட் 2022 இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து பெரும் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சியை அமைத்தார் என்பது குறிப்பிடத்க்கது.