#U19WC2024 : இங்கிலாந்து அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்..!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18-வது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் ஆட்டமிழந்த பின் மீண்டும் ரன்களை சேர்க்க திணறியது இங்கிலாந்து அணி. நிதானமாக ரன்களை சேர்க்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹம்சா ஷேக் 54 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் நாதன் எட்வர்ட்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து எளிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடக்க வீரரும், அணியின் கேப்டனும் ஆன ஸ்டீபன் பாஸ்கல் சிறப்பாக விளையாடி 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பின் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் விக்கெட்டை பறிக்கொடுத்தாலும் பொறுப்புடனும், நிதானத்துடனும் விளையாடி இக்கட்டான நிலைக்கு எடுத்து செல்லாமல் 41 ஓவருக்கு 196 என்ற இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் நாதன் எட்வர்ட்ஸ் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.