பிப்.13 தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது.
இதில் குறிப்பாக, இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுவதால், தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அவர்கள் சொந்த மாநிலத்தில் (பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம்) தனித்து போட்டியிடுவதாக அறிவித்தனர்.
காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டாததால் இந்த முடிவு என தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும், தனித்து போட்டியிட்டாலும், இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம் எனவும் அம்மாநில முதலமைச்சர்கள் தெரிவித்தனர். இந்த சூழலில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று முதல் பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொள்கிறார்.
கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை!
இதில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடத்த பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டிற்கான தேர்தல் குழு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவில், பா.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 35 பேர் இடம் பிடித்திருந்தனர்.