அயோத்தியில் புதிய மசூதி கட்டும்பணி எப்போது தொடக்கம்? மசூதி அறக்கட்டளை தகவல்!
அயோத்தியில் புதிய மசூதி கட்டும் பணி வரும் மே மாதம் தொடங்கும் என்று மசூதி திட்டத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு அளித்து, அதில், ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. அதேபோல, புதிய மசூதி கட்டுவதற்கு உத்தரப்பிரதேச சுன்னி வக்பு வாரியத்திடம் தனியாக 5 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்டது.
இதில், இந்து பக்தர்கள் தங்களின் புனித தளமாக கருதப்படும் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், புதிய மசூதி கட்டப்பட கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் எந்தவொரு பணியும் தொடங்கப்படவே இல்லை. இருப்பினும், இந்தியாவின் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்த ஆண்டு இறுதியில் அதே நகரத்தில் ஒரு புதிய மசூதியை கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதிய மசூதி திட்டத்தை மேற்பார்வையிடும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் (ஐ.ஐ.சி.எஃப்) மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹாஜி அர்பத் ஷேக் கூறியதாவது, வரும் மே மாதத்தில், புனித ரமலான் மாதத்திற்குப் பிறகு மசூதிக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும், மசூதி பணி முடிய மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!
எனவே, அயோத்தியில் மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா என்ற புதிய மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. நபிகள் நாயகத்தின் பெயரால் அமைக்கப்படும் மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா மசூதி, அயோத்தியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தன்னிப்பூரில் கட்டப்பட உள்ளது.
மசூதி தவிர, அங்கு பல் மருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர் மற்றும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கொண்ட கல்லூரிகளும் அமைக்கப்படும் என்றும் இத்துடன் இரண்டு மருத்துவமனைகளும் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கட்டுமான பணிகள் முடிந்து மசூதி திறக்க தயாரானவுடன், மெக்கா மசூதியில் தொழுகைக்கு தலைமை வகிக்கும் இமாம்-இ-ஹரம் உள்பட அனைத்து நாடுகளையும் சேர்ந்த தலைமை மதகுருமார்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.